ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக்கோரியும், இது தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்கவும் மறு ஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
மறு ஆய்வு மனு தமிழகத்தை சேர்ந்த வீர விளையாட்டு மீட்பு கழகத்தின் சார்பில் டி.ராஜேஷ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரபு ராமசுப்பிரமணியம் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) போட்டியில் காளைகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவது இல்லை. மனிதனும், காளையும் ஒன்றிணைந்து விளையாடும் போட்டியாகவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
அன்பு காட்டி... ஏறு தழுவுதல் என்ற சொல் காளை மாட்டுக்கும், விவசாயிக்கும் உள்ள உறவையும், பாசத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது. 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த விளையாட்டில் காளை மாடுகள் அவற்றை வளர்ப்பவர்களின் வீடுகளில் ஒரு உறுப்பினரை போல அன்பு காட்டி வளர்க்கப்படுகின்றன.
ஏறு தழுவுதல் கோவில் சார்ந்த விளையாட்டு ஆகும். கோவில்களில் வளர்க்கப்படும் காளைகள் மாட்டுப்பொங்கல் அன்று பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. எனவே அவை கொடுமைப்படுத்தப்படுகின்றன என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
பாரபட்சம் மிருகவதை தடை சட்டம் ஒரு சமூகத்தின் மத சடங்கு தொடர்பாக மாடுகளை வெட்டிக்கொல்வதற்கு அனுமதி வழங்குகிறது. அதே வேளையில் தமிழகத்தில் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏறு தழுவுதல் என்னும் வீரவிளையாட்டுக்கு தடை விதிக்கிறது. இது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது போல அமைகிறது. இந்த அம்சத்தை சுப்ரீம் கோர்ட்டு தன்னுடைய தீர்ப்பில் எடுத்துக்கொள்ள தவறி இருக்கிறது.
மேலும் மாட்டுக்கறி மற்றும் தோல் தொழிற்சாலை சார்ந்த மாபியா கும்பல் இது போன்ற தடையை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு விவசாயி தன்னுடைய உணவுக்காக ஒரு நாளைக்கு ரூ.50–ல் இருந்து ரூ.100 வரை செலவழிக்கிறான். ஆனால் அவன் தன்னுடைய காளை மாட்டுக்காக ஒரு நாளைக்கு ரூ.500–க்கும் மேல் செலவழிக்கிறான்.
விலக்க வேண்டும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பதால் பொருளாதார ரீதியாக ஒருவருக்கு அதிக வருமானமும் கிடைக்காது. அதிக பணம் செலவழித்து ஏறு தழுவுதலை ஊக்கப்படுத்தவே இவை போன்ற மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு பற்றிய தவறான செய்திகளே அதிகம் பரப்பப்படுகின்றன. எனவே, சுப்ரீம் கோர்ட்டு 2014 மே மாதம் 7–ந்தேதி ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போட்டிகள் ஆகியவற்றின் மீது விதித்த தடையை நீக்கும் வகையில் மறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தமிழர்களின் பாரம்பரியமான விழாவான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த மனுவை மிக விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 2014 மே மாதம் 19–ந்தேதி தாக்கல் செய்த மனு, பதிவாளர் அலுவலகத்தில் சில குறைகள் நீக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதனால் இந்த மறு ஆய்வு மனு எந்த அமர்வுக்கு முன்பும் விசாரணைக்காக பதிவாளரால் நாள் குறிப்பிடப்படவில்லை.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு தற்போது விசாரணைக்கான பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது.
அதே வேளையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுவை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment