இதுவரை அணுக்குண்டுகளையும், அணு ஏவுகணைகளையும் சோதித்து பார்த்து வந்த வடகொரியா முதல் முறையாக அணுக்குண்டை விட அதிபயங்கரமான ஹைட்ரஜன் குண்டினை வெடித்து நேற்று சோதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, “வடகொரியா ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்திருப்பது நமது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என கூறினார். மேலும் அவர் கூறும்போது, “ இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு எதிரான செயல். அணு ஆயுதப்பரவலுக்கு எதிரான சர்வதேச முயற்சிக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்” என்றார்.
தென் கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹே, “வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி இருப்பது மிகவும் ஆத்திரம் ஏற்படுத்தும் செயல் ஆகும். இது தென் கொரியாவின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல் ஆகும். சர்வதேச அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலும் ஆகும்” என கருத்து தெரிவித்தார்.
தென்கொரியா முன்னதாக விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்னும் கூடுதலான பொருளாதார தடைகளை விதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். வடகொரியா தனது செயலுக்கு உரிய விலையை கொடுத்தே தீர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தமட்டில், வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனையை உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில், “ வடகொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு உரிய பதிலடி கொடுப்போம்” என வாஷிங்டன் கூறுகிறது.
வடகொரியாவின் ராஜதந்திர காப்பாளராக விளங்குகிற சீனா இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “வெளியாகியுள்ள ஹைட்ரஜன் குண்டுவெடிப்பு சோதனை குறித்த தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். அந்த நாடு, ஹைட்ரஜன் குண்டுவெடிப்பு குறித்து முன்கூட்டி எங்களுக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை” என கூறியது.
ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப், வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு தனது நாடு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “வடகொரியா போக்கிரி அரசாக செயல்படுவதை, இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை எடுத்துக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் வடகொரியாவிடம் நேரில் எங்களது கவலையை பதிவு செய்வோம். ஐ.நா. கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்” என கூறினார்.
இங்கிலாந்து வெளியுறவு மந்திரி பிலிப் ஹேமண்ட் கருத்து தெரிவிக்கையில், “வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பை இங்கிலாந்தும், சீனாவும் எதிர்க்கின்றன. வடகொரியா மீதான பொருளாதார தடையின் பிடி இறுக வேண்டும்” என கூறினார்.
பிரான்சும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு எதிரான இந்த செயல், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment