பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2-ந் தேதி ஊடுருவினர். தொடர்ந்து 4 நாட்கள்
தாக்குதல் நடத்தினர். நமது பாதுகாப்பு படையினர் தீரமுடன் பதிலடி கொடுத்து, 6
தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.
இருப்பினும், இந்த தாக்குதலின்போது, நமது பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தது நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள தீவிரவாத எதிர் தாக்குதலில் நிபுணத்துவம் பெற்ற ராணுவத்தின் சிறப்பு படைகளை அழைக்காமல், என்.எஸ்.ஜி. என்னும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களை அழைத்தது ஏன் என்ற கேள்வி பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக 4 பாரா (எஸ்.எப்.), 9 பாரா (எஸ்.எப்.) படைப்பிரிவுகள் ஜம்மு-காஷ்மீரில்தான் உள்ளன. இமாச்சலபிரதேசத்தில் 1 பாரா (எஸ்.எப்.) படைப்பிரிவு உள்ளது.
“இந்த படைகளை விட்டு விட்டு, அதிரடிப்படையான தேசிய பாதுகாப்பு படையை அழைத்தது ஏன்? சோதனையான சூழ்நிலையில், தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதற்கு ராணுவத்தை அழைத்திருந்தால் அவர்கள் இன்னும் திறம்பட நிலைமையை கையாண்டிருப்பார்களே?” என பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ இத்தகைய நடவடிக்கைகளுக்காகவே உள்ளவை, சிறப்பு படை பிரிவுகள். இத்தகைய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். தேசிய பாதுகாப்பு படையினரை அழைப்பதற்கு அங்கு யாரையும் அவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கவில்லை” என கூறினார்.
ராணுவத்தின் 29 காலாட்படை பிரிவு பதன்கோட்டைத்தான் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. அங்கு 40 ஆயிரம் துருப்புகள் உள்ளன.
யார் பொறுப்பு ஏற்பது என்பதுதான் அனைவரின் மனங்களிலும் எழுந்த கேள்வியாக அமைந்தது என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி குர்மீத் கன்வால் கூறி உள்ளார்.
இதற்கிடையே பதன்கோட் தாக்குதல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாக கூறப்பட்ட போலீஸ் அதிகாரி சல்விந்தர்சிங்குக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்த வாக்குமூலத்தில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அவர் சம்பவத்தன்று சென்ற இடங்களுக்கெல்லாம் அழைத்து சென்று இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment