இங்கிலாந்தைச் சேர்ந்த அரசுசாரா அமைப்பான ‘ஒன் யங் வேர்ல்ட்’-ன் இந்த
ஆண்டுக்கான வளர்ந்துவரும் நட்சத்திரம் என்ற பட்டத்துடன், வரும் 2018-ம்
ஆண்டு விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் பிரிட்டனில்
வசித்துவரும் பாகிஸ்தானிய இளைஞர் ஹுசைன் மானாவேர் வென்றுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு செய்துவரும் ஹுசைன் மானாவேர்(24) தனது பணியைப் பற்றிய ஒரு வீடியோவைப் பதிவுசெய்து இந்த அரசுசாரா அமைப்பின் போட்டிக்கு அனுப்பி வைத்தார். சுமார், தொன்னூறு பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஹுசைன் மானாவேர் விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை வென்றுள்ளார்.
இந்தப் பரிசை வென்றதன் மூலம், ஹுசைன் மானாவேர் விண்வெளிக்கு செல்லும் முதல் பிரிட்டன் முஸ்லீம், முதல் பாகிஸ்தானியர் மற்றும் மிக இளம் வயதில் விண்வெளிக்கு செல்லவிருக்கும் முதல் பிரிட்டன்காரர் போன்ற பெருமைகளை தனதுடைமையாக்கிக் கொண்டுள்ளார்.
கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஒன் யங் வேர்ல்ட்டின் உலகளாவிய கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான ரோன் காரன் ஹுசைன் மானாவேருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
ஏற்கனவே, நரிமா சலீம் என்ற தனது குடும்பத்தாருடன் துபாயில் வசித்துவரும் பாகிஸ்தானிய பெண் கடந்த 2005-ம் ஆண்டு போட்டியொன்றில் விண்வெளி செல்லும் வாய்ப்பை வென்றிருந்தார். நாசாவிடம் விண்வெளி வீராங்கனைக்கான பயிற்சியை மேற்கொண்ட அவர், இதுவரை தனது விண்வெளி பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment