சென்னையில் மழை பாதிப்பு: நிவாரண முகாம்களில் 8000 பேர் தஞ்சம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2015

சென்னையில் மழை பாதிப்பு: நிவாரண முகாம்களில் 8000 பேர் தஞ்சம்

சென்னையில் மழை பாதிப்பு: நிவாரண முகாம்களில் 8000 பேர் தஞ்சம்
சென்னை, நவ. 25–
வடகிழக்கு பருவமழை சென்னையில் இருமடங்கு அதிகமாக பெய்தது. இதனால் சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.
வடகிழக்கு பருவ மழை காலத்தில் சென்னையில் 3 மாதத்தில் சராசரியாக 79 செ.மீ. மழை பெய்யும். நேற்று முன்தினம் வரை 58 செ.மீ. மழை தான் பெய்ய வேண்டும். ஆனால் 15 நாளில் மொத்த மழையும் அதாவது 114 செ.மீ. மழை பெய்ததால் இந்த அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இவை கடல் மட்டத்தில் இருந்து 0.40 மீ. உயரத்தில்தான் உள்ளன. சென்னை நகரம் கடல் மட்டத்துக்கு இணையாக சம தளத்தில் இருப்பதால் மழை நீரானது வேகமாக செல்லாது.
ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் விரைந்து செல்லாது. இதனால்தான் சென்னை நகரில் வெள்ளம் வடிய நாள் கணக்கில் ஆகிறது.
ஏற்கனவே சென்னையில் வெள்ளம் தேங்கிய நிலையில் 2 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் கடந்த 23–ந்தேதி மழை கொட்டியது. அன்று மதியம் வரை வெயில் அடித்த நிலையில் மாலை 4 மணிக்கு மழை கொட்ட ஆரம்பித்தது. இரவு 10 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது.
இந்த 5 மணி நேரத்தில் சென்னையில் 8 செ.மீ. முதல் 12 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வேளச்சேரி, ராம்நகர், விஜயநகர், அம்பத்தூர், நொளம்பூர், நெசப்பாக்கம், வில்லிவாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம், முடிச்சூர், தாம்பரம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
முதல் நாள் வரை 95 சாலைகளில் தான் மழை வெள்ளம் ஓடியது. ஆனால் நேற்று முன்தினம் பெய்த மழையால் நகரின் 500 சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து ஒரு இடத்தை கடக்க 5 மணி நேரம் ஆனது.
சென்னையில் மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கூவம் கரையோரப் பகுதிகளில் உள்ள குடிசைகளும் மூழ்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அவர்கள் நள்ளிரவில் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
மீண்டும் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, தீயணைப்பு படையினர், மாநகராட்சி ஊழியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், போலீசார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை நள்ளிரவு முதல் அதிகாலை வரை படகுகளில் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னையில் மொத்தம் 523 இடங்களில் இருந்து 8,000 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் 523 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளன். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் வடிந்த பகுதிகளில் வசித்தவர்கள் வீடு திரும்பினார்கள். வெள்ளம் வடியாத பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.
வெள்ள நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்களும் செயல்பட்டு வருகின்றன.
மழை வெள்ளம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 12–ந்தேதி முதல் பள்ளி-கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்னும் வெள்ளம் வடியாததாலும், பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்து இருப்பதாலும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages