வெற்றியின் வெளிச்சத்தோடு இனிய புத்தாண்டை வரவேற்போம்…. - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 30 December 2015

வெற்றியின் வெளிச்சத்தோடு இனிய புத்தாண்டை வரவேற்போம்….

“திட்டமிடத் தவறுகிறவன் தவறு செய்யத் திட்டமிடுகிறான்” ஓராண்டு முழுக்கச் செய்யவேண்டியசெயல்களை, முடிக்கவேண்டிய பணிகளை ஆண்டின் முதல்நாளில், மிகச்சரியாக திட்டமிட்டு முன்யோசனையோடு செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

இயற்கையோடு இயைந்த வாழ்வு... நீர், நிலம், காற்று, ஆகாயம் போன்ற இயற்கை அன்னையின் அற்புதமான வடிவங்களை மாசுபடுத்த மாட்டோம் என்ற உறுதியைப் இந்தப்புத்தாண்டில் எடுத்துக் கடைப்பிடித்து வாழ்வோம். பாலிதீன்பைகளைப் பயன்படுத்தமாட்டோம், பூமியைக் குப்பைக் கிடங்காக்கிட மாட்டோம் என்ற உறுதி மொழியை இந்தப்புத்தாண்டில் அனைவரும் எடுப்போம்.

மாசில்லாத உலகம் வேண்டும், மரபான விவசாயமுறைகள் வேண்டும், நீர்நிலைகளைக் காக்க வேண்டும், நிலமெலாம் மரங்கள் நிறையவேண்டும், நிலையான இன்பம்வேண்டும் என்று வேண்டுவோம்.

தினமும் ஓர் உயிருக்கு நன்மை செய்வோம் “பிரார்த்தனைசெய்யும் உதடுகளைவிடச் சேவைசெய்யும் கரங்கள் உன்னதமானவை” என்ற பொன்மொழியில்தான் எவ்வளவுபொருள்..

“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம்கொட்டுதடி” என்று மகாகவி பாரதியின் கூற்றுப்படி, கோடிக் கண்களின் இன்ப துன்பத்தை நம் ஜோடிக் கண்களால் கண்டு இந்தப் புத்தாண்டு தினத்தில்இருந்து தினமும் ஓர் உயிருக்குக் கட்டாயம் நன்மை செய்த பின்பே, அன்று உறங்கச்செல்வேன் என உறுதிமொழி எடுப்போம்.

எந்த உயிருக்கும் நன்மை செய்ய வாய்ப்பே கிடைக்காவிட்டால், ஒரு செடிக்கு ஒரு செம்பு தண்ணீரையாவது விட்டு நன்மையைச் செய்வோம் என்று உறுதிமேற்கொள்வோம்.

முயற்சியின் முதுகிலேறிப் பயிற்சியின் படிக்கட்டுகளைக் கடந்துவிட்டால், வெற்றி நமக்கு விரல் நுனியருகில்தான். வெற்றியின் வெளிச்சத்தோடு இந்தப்புத்தாண்டினைத் தொடங்குவோம்.

துயரங்களை துார எறிந்துவிட்டு ஆனந்தத்தின் ஆரம்பம் என மகிழ்வோடுஅனைவருக்கும் வாழ்த்துச்சொல்வோம்.இழப்பதற்கு என்ன இருக்கிறது? இருப்பதற்கே வந்தோம். இதில்கோபமும் பொறாமையும் ஏன்? வெற்றிக்கான காரணங்கள் வெகு அருகில் உள்ளன. எதிர்வரும்காலம் என் காலமென்று உற்சாகத்தோடு இந்த இனிய புத்தாண்டைவரவேற்போம்.

சாந்தியும் சமாதானமும் உலகமெல்லாம் செழித்து வளர அமைதி கொலுவிருக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். விரிவானம் காத்திருக்கிறது... நாம் பறப்பதற்கு...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages