31 ஆவது ஆண்டில் விண்டோஸ்
1985 ஆண்டில் அறிமுகமாகி, இதுவரை பெரிய அளவிலான 9 மாற்றங்களை மேற்கொண்டு, தொடர்ந்து பன்னாட்டளவில் பெரும்பாலானவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக விண்டோஸ் இயங்கி வருகிறது. இன்றைக்கும் 90% கம்ப்யூட்டர்களில் இயங்குவது, விண்டோஸ் இயக்க முறைமையே. இன்றைய விண்டோஸ் நிறைய மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், அதன் பல அம்சங்களும் செயல்பாடுகளும், காலத்தின் கட்டாயத்தை எதிர்த்து நின்று, இன்றும் தொடர்கின்றன என்பதே இதன் சிறப்பாகும். தன் அடையாளத்தை இழக்காமலும், தேவைக்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டும், கம்ப்யூட்டர் செயல்பாட்டின் திறனைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட இதன் பெரிய செயல் மாற்றம், கீ போர்ட் மற்றும் மவுஸ் வழி இயக்கத்திலிருந்து தொடு உணர் திரை இயக்கத்திற்கு மாறியதுதான். பில்கேட்ஸ் சிந்தனை மற்றும் திறன் குழந்தையாக நமக்குக் கிடைத்த விண்டோஸ் பதிகை 1லிருந்து, சத்ய நாதெள்ளாவின் வளர்ப்பு மகனாக உருவெடுத்த வரையிலான காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை இங்கு காணலாம்.1970 ஆம் ஆண்டு, பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன், இனி எதிர்காலம் என்பது பெர்சனல் கம்ப்யூட்டிங் என்ற பழக்கத்தில் தான் அமைக்கப்படும் என்பதை உணர்ந்தனர். 1975 ஆம் ஆண்டில், இருவரும் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கினர். பின்னர், ஜுன், 1980ல், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் இயங்க புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வழங்கினார்கள். அதுவே MS-DOS (Microsoft Disk Operating System) எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டு மக்களிடம் தீயாய்ப் பரவியது. இருப்பினும், மக்கள் இதனைக் கற்றுப் பயன்படுத்துவதில், சிக்கல்களை எதிர்கொண்டனர். அனைவருக்குமான சாதனமாக இல்லாமல், சற்று கற்றுணர்ந்தவர்களுக்கே, டாஸ் இயக்கம் கை வந்த ஒன்றாக அமைந்தது. இதனைக் கண்காணித்த, மைக்ரோசாப்ட், பயனாளர்களின் சிறந்த நண்பனாக இயங்கக் கூடிய, இயக்கக் கூடிய சிஸ்டம் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்ற வேட்கையுடன், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வெளியிட்டது. அதுவே, விண்டோஸ் என்ற பெயரில் உருவானது.விண்டோஸ் 1: முழுமையான விண்டோஸ் 1, 1985 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் வெளியானது. 16 பிட் இயக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிராபிகல் செயல்முறையிலான முதல் முயற்சியாக வடிவம் பெற்றிருந்தது. இதன் இயக்கம், அப்போதுதான் பழக்கத்தில் வந்த மவுஸ் சாதனத்தினைப் பெரும்பாலும் சார்ந்திருந்தது. இதனை இயக்கிய பலர், மவுஸினைச் சிக்கல் நிறைந்த ஒரு சாதனமாகக் கருதக் கூடாது என மைக்ரோசாப்ட் திட்டமிட்டது. இதற்காகவே, பயனாளர்கள் இதனைப் பழக்கத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக, Reversi என்னும் கேம் ஒன்றை விண்டோஸ் இயக்கத்தில் இணைத்தது. இதனை, மவுஸ் கொண்டு மட்டுமே இயக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தந்தது. கீ போர்ட் வழியில் இதனை இயக்க முடியாது. இது ஒரு கேம் என்பதால், பயனாளர்கள், கேம் விளையாடி, மவுஸை விரும்பத் தொடங்கி, அதனைப் பயன்படுத்துவது எளிமையானதுதான் என்ற முடிவிற்கு வருவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்த்தது. இந்த முயற்சியில், மைக்ரோசாப்ட் வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். விண்டோஸ் 2: விண்டோஸ் பதிகை 1 வெளியாகி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1987 டிசம்பரில் விண்டோஸ் பதிகை 2 வெளியானது. இதில் தரப்பட்ட மிகப் பெரிய மாற்றம், கம்ப்யூட்டர் செயல்பாட்டின் போது, விண்டோக்கள் ஒன்றோடொன்றின் மேலாக அமைந்து, இயக்கத்திற்கு வழி கொடுத்ததுதான். விண்டோவினைப் பெரிதாக்கிச் செயல்படவும், செயல்படாதபோது, சுருக்கி வைக்கவுமான தொழில் நுட்ப வசதி தரப்பட்டது. கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அமைப்பு நிலைகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில், கண்ட்ரோல் பேனல் அமைக்கப்பட்டு விண்டோஸ் 2 உருவாக்கப்பட்டது. இந்த கண்ட்ரோல் பேனல் அமைப்பு, இன்று வரை விண்டோஸ் சிஸ்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். விண்டோஸ் 1 போல, விண்டோஸ் 2 சிஸ்டமும், ஹார்ட் ட்ரைவ் இல்லாத பெர்சனல் கம்ப்யூட்டரில், இரண்டு பிளாப்பி ட்ரைவ்களில் இயங்கும் சிஸ்டமாக இருந்தது என்பது, இன்றைக்கு வியப்பினைத் தரும் செய்தியாகும்.விண்டோஸ் 3: ஹார்ட் ட்ரைவ் ஒன்றினைக் கட்டாய இணைப்பாகக் கொண்ட விண்டோஸ், 1990 ஆம் ஆண்டு விண்டோஸ் பதிகை 3 ஆக வெளியானது. விண்டோஸ் இயக்கத்திலேயே, எம்.எஸ்.டாஸ் இயக்க செயலிகளை இயக்கும் வசதி இதில் அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்கும் திறன் அளிக்கப்பட்டது. இதில், 256 வண்ணங்களைக் காட்ட முடிந்தது. இதன் மூலம் நவீன வண்ணமயமான இடைமுகம் உருவாக்கித் தரப்பட்டது. இதில் தான் சீட்டுக் கட்டு விளையாட்டான, 'சாலிடெர்' தரப்பட்டது.விண்டோஸ் 3.1: விண்டோஸ் 1 மற்றும் 2, எளிய, சில குறிப்பிட்ட வசதிகளைத் தரும் வகையிலான மேம்படுத்தும் இயக்க முறைமைகளாக வெளியாயின. ஆனால், 1992ல் வெளியான, விண்டோஸ் 3.1, முதன் முதலாக, 'ட்ரூ டைப் பாண்ட்ஸ்' என்று அழைக்கப்படும் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியது. அதனால், விண்டோஸ் இயக்கம், பதிப்பு வேலைகளை மேற்கொள்வதற்கான நல்லதொரு மேடையாக இயங்கத் தொடங்கியது. Minesweeper என்னும் கேம் இதனுடன் அறிமுகமானது.விண்டோஸ் 95: 1995 ஆகஸ்ட் மாதம், விண்டோஸ் 95 அறிமுகமானது. விண்டோஸ் 95 வெளியாகி, ஐந்தே வாரங்களில் 70 லட்சம் உரிமங்கள் விற்பனையாயின. இதில் இணைய இணைப்பிற்கான வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. டயல் அப் நெட்வொர்க்கிங் என்னும் வசதி எளிமையாக்கப்பட்டு தரப்பட்டது. புதியதாகப் பல ப்ளக் இன் ப்ளே வசதிகள், பயனாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. இதனை வெளியிடுகையில், மைக்ரோசாப்ட் அதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரத்துடன் வெளியிட்டது. தொலைக் காட்சி வர்த்தக விளம்பரமாக "Start Me Up" என்ற பாடல், புதிய ஸ்டார்ட் பட்டனுடன் வெளியாகி, மக்கள் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது. Brian Eno என்பவர் இந்தப் பாடலை, ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டரில் எழுதித் தந்தார் என்பது வியப்பான செய்தியாகும். முதல் முதலாக விண்டோஸ் இயக்கத்தின் சிறந்த அம்சமாக இன்று வரை பயனாளர்களால் புகழப்படும் ஸ்டார்ட் பட்டன் மற்றும் ஸ்டார்ட் மெனு அறிமுகமானது. இதனுடன், 32 பிட் இயக்கச் செயல்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது. டாஸ்க் பார் தரப்பட்டது. பல்வேறு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் இயக்கும் திறன் இதில் மேம்படுத்தப்பட்டு கிடைத்தது. இவை அனைத்தும் இருந்தாலும், அடிப்படையான, எம்.எஸ். டாஸ் இயக்கம், விண்டோஸ் 95 இயக்கத்திற்கும் அடிப்படைச் செயலியாக இருந்தது. சில புரோகிராம்களை இயக்கவும், சில கம்ப்யூட்டிங் தொடர்பான அம்சங்களைச் செயல்படுத்தவும், டாஸ் இயக்கம் தேவையானதாக இருந்தது.1990 ஆம் ஆண்டில், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், இணையம் குறித்து பல இலக்குகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். நெட்வொர்க்குகளின் நெட்வொர்க்காக இணையம் இணங்கி, உலகில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் இணைக்கும் வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி உழைக்கத் தொடங்கினார்கள். 1995 ஆம் ஆண்டில், பில்கேட்ஸ் "The Internet Tidal Wave," என்ற தலைப்பில் குறிப்பு ஒன்றை வழங்கி, பெர்சனல் கம்ப்யூட்டரை அடுத்து, இந்த உலகை ஆளப் போவது இணையம் தான் என்று முழக்கமிட்டார்.1995 ஆம் ஆண்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்பின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கனவே உலக வைய விரி வலை என்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த ஆர்ப்பரிப்பில், இந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் இணைந்தது. 1990 ஆம் ஆண்டில், பணியாற்றும் அலுவலகங்களிலும், வீடுகளிலும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் முக்கிய சாதனங்களாக இடம் பிடித்தன. இணையத்தை அணுக, வீதிகளில் சைபர் கபே (cyer café) என்னும் இணைய மையங்கள் செயல்படத் தொடங்கின. விண்டோஸ் 98: ஜூன், 1998ல் வெளியான, விண்டோஸ் 98, விண்டோஸ் 95 இயக்க முறைமையின் கட்டமைப்பிலேயே உருவாக்கப்பட்டது. இதனுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிகை 4 இணைத்துத் தரப்பட்டது. அத்துடன், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், விண்டோஸ் அட்ரஸ் புக், மைக்ரோசாப்ட் சேட் மற்றும் நெட்ஷோ பிளேயர் ஆகியவை தரப்பட்டன. நெட்ஷோ பிளேயர், பின் நாளில், விண்டோஸ் மீடியா பிளேயர் 6.2 ஆக, விண்டோஸ் 98 இரண்டாவது பதிகையில், 1999ல் உருவெடுத்தது. விண்டோஸ் மி: விண்டோஸ் மில்லினம் எடிஷன் (Windows Millennium Edition) என அழைக்கப்பட்ட விண்டோஸ் மி சிஸ்டம், பலராலும், மிகவும் சாதாரணமான ஒன்றாகக் கருதப்பட்டது. விண்டோஸ் விஸ்டா அறிமுகமாகும் வரை, இதனை எவரும் விருப்பத்தோடு இயக்கவில்லை. எம்.எஸ்.டாஸ் இயக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடைசி விண்டோஸ் இயக்கம், விண்டோஸ் மி தான். செப்டம்பர், 2000 ல் வெளியான இதனை நுகர்வோரை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிஸ்டம் என அழைக்கலாம். பலவகையான பயன்பாடுகளை எதிர்பார்க்கும் நுகர்வோர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு இதன் பதிகைகள் வெளியாயின. முதல் முதலாக, இயக்க முறைமை தானாக, டேட்டா மீட்டெடுக்கும் செயல்பாட்டினைக் கொண்டதாக வெளியானது.விண்டோஸ் 2000: விண்டோஸ் மி சிஸ்டத்தின், நிறுவனப் பதிப்பாக, விண்டோஸ் 2000, பிப்ரவரி, 2000ல் வெளியானது. வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விண்டோஸ் என்.டி. சிஸ்டத்தின் அடிப்படையில் இது வடிவமைக்கப் பட்டிருந்தது. இதுவே, பின்னாளில், விண்டோஸ் எக்ஸ்.பி. சிஸ்டத்தின் அடிப்படையான இயக்கமாக இருந்தது.விண்டோஸ் எக்ஸ்.பி: விண்டோஸ் இயக்க முறைமையின், மிகச் சிறந்த பதிப்பான விண்டோஸ் எக்ஸ்பி, அக்டோபர், 2001ல் வெளியானது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கான பதிப்புகளையும், நுகர்வோருக்கான பதிப்புகளையும், ஒரே குடையின் கீழ் விண்டோஸ் எக்ஸ்பியாகக் கொண்டு வந்தது. விண்டோஸ் 2000 போல, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் என்.டி. சிஸ்டத்தின் கட்டமைப்பினை, அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில், விண்டோஸ் மி சிஸ்டத்தின் அம்சங்களைக் கொண்டிருந்தது. ஸ்டார்ட் மெனு மற்றும் டாஸ்க் பார் ஆகியவற்றின் தோற்றங்கள், கண்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்டன. பல ஆண்டுகள், பயனாளர்கள் விரும்பிய பச்சை நிற ஸ்டார்ட் பட்டன் விண்டோஸ் எக்ஸ்பியில் தரப்பட்டது. டாஸ்க் பாரும் நீல நிறத்தில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்தது. இன்னும் பல கண்களுக்கு விருந்தளிக்கும் அம்சங்கள் இதில் தரப்பட்டன. பல ஆண்டுகள் இயக்கத்தில் இருந்த ஒரே இயக்க முறைமை, விண்டோஸ் எக்ஸ்பி தான். இது பெரிய அளவில், மூன்று முறை மேம்படுத்தப்பட்டதனை இங்கு குறிப்பிட வேண்டும். ஏப்ரல், 2014 வரை, இது தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சப்போர்ட்டினைப் பெற்றிருந்தது. பலரின் எதிர்ப்பிற்கு இடையே, வேறு வழியின்றி, இதற்கான சப்போர்ட் பைல்கள் தருவதனை, மைக்ரோசாப்ட் நிறுத்தியது. இன்றும், கணிசமான நுகர்வோரால், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தப்படுகிறது என்பதனை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.2001 முதல் 2005 வரை விண்டோஸ் எக்ஸ்பி, பல மாற்றங்களுடன், பல பதிப்புகளாக வெளி வந்தது. இதற்கான ஹெல்ப் மற்றும் சப்போர்ட் மையம், பயனாளர்களுக்கு அதிக அளவில் உதவியது. இது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு சிறந்த வசதி என அனைவராலும் பாராட்டப்பட்டது. விண்டோஸ் எக்ஸ்பி அடுத்து, விண்டோஸ் எக்ஸ்பி 64 பிட் பதிப்பு (2001) விண்டோஸ் எக்ஸ்பி மீடியா செண்டர் எடிஷன் (2002) மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி டேப்ளட் பி.சி. எடிஷன் (2002) என பல பதிப்புகள் வெளியாயின.விண்டோஸ் விஸ்டா: விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி, ஆறு ஆண்டுகள் கழித்து, ஜனவரி 2007ல், விண்டோஸ் விஸ்டா வெளியானது. விஸ்டாவைப் பொறுத்தவரை, அதில், ஒளி ஊடுறுவும் வகையிலான விண்டோக்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டதனைச் சிறப்பாகச் சொல்லலாம். தேடல் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான அம்சங்களும் இதில் மேம்படுத்தப்பட்டு கிடைக்கப் பெற்றன. சற்றுப் பெரிய அளவிலான இயக்க முறைமை பைல்கள் இதில் இருந்தன. செயலிகளை இயக்குகையில், அடிக்கடி, அனுமதியைக் ("User Account Control") கேட்கும் வழக்கம் இதில் தொடங்கியது. இன்று வரை இந்த வழக்கம் உள்ளது. இதனால், பயனாளர்களுக்குத் தெரியாமல், அவர்களின் அனுமதியினைப் பெறாமல், எந்த செயலியும் இயங்காது. ஆனால், பயனாளர்களோ, எந்த வித முன் யோசனையும் இன்றி, அனுமதிக்கு "yes" கொடுக்கும் பழக்கத்தினை, இந்த சிஸ்டத்திலிருந்து பெற்றனர்.விண்டோஸ் விஸ்டா அல்டிமேட் சிஸ்டத்தில் அறிமுகப்படுத்திய BitLocker Drive Encryption என்னும் தொழில் நுட்பம், கம்ப்யூட்டரில் டேட்டாவிற்கான கூடுதல் பாதுகாப்பினை அளித்தது. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை இந்த கால கட்டத்தில் அதிக எண்ணிக்கையினை எட்டியதால், கம்ப்யூட்டர் பணியில் டேட்டா பாதுகாப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அவற்றை மைக்ரோசாப்ட் தன் முதன்மைச் சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டது. விண்டோஸ் 7: விண்டோஸ் விஸ்டா இப்படியெல்லாம் இருந்திருக்கக் கூடாதா என்று நுகர்வோர்கள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களையும் கொண்டதாக, விண்டோஸ் 7 சிஸ்டத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வடிவமைத்து வழங்கியது. அக்டோபர் 2009ல் இது வெளியானது. விஸ்டா சிஸ்டம் குறித்து வெளியான, அனைத்து அதிருப்தியான விஷயங்கள் அனைத்திற்கும் விடையும், தீர்வும் தரும் வகையில், விண்டோஸ் 7 அமைந்திருந்தது எனப் பலரும் பாராட்டினர். தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. நுகர்வோர் எளிமையான வழிகளில் செயல்படும் வகையில், இதன் இடை முகங்கள் அமைக்கப்பட்டன. டயலாக் பாக்ஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட வேகம், நிலையான இயக்கம், எளிதான இயக்க வழிகள் என இருந்ததால், விண்டோஸ் எக்ஸ்பியைக் கொண்டு இயங்கி வந்த பெரும்பாலானவர்கள், விரும்பி, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறினார்கள். இன்னும், இதன் பின்னர், மூன்று விண்டோஸ் சிஸ்டங்கள் வந்த பின்னரும், பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சிஸ்டமாக, விண்டோஸ் 7 இருப்பது இதற்கு அத்தாட்சியாகும். இதனால், பலர் விஸ்டாவைக் கைவிட்டனர்.விண்டோஸ் 8: அக்டோபர் 2012ல் வெளியான விண்டோஸ் 8, விண்டோஸ் இயக்க முறைமையில், புரட்சிகரமான மாற்றத்தினை, அதன் பயனாளர் இடைமுகச் செயலியில், மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டு வந்தது. ஸ்டார்ட் பட்டன் நீக்கப்பட்டது. ஸ்டார்ட் மெனுவும் மறைந்தது. புரோகிராம்களின் ஐகான்கள், வண்ணமயமான ஓடுகளில் பதிந்து தரப்பட்டன. தொடு உணர் திரை இயக்கம் தரப்பட்டது. கீ போர்ட் மற்றும் மவுஸ் மூலமும் இயங்கும் வழிகளும் தரப்பட்டன. புரோகிராம்கள் கொண்ட ஓடுகள், உயிருள்ளவையாக இயங்கி, டேட்டாக்களை மேம்படுத்தித் தந்தன. இதனால், திரையைப் பார்த்த மாத்திரத்தில், நம்மால், மேம்படுத்தப்பட்ட, அப்போதைய டேட்டாவினைக் காண முடிந்தது. புரோகிராம்களின் பட்டியலும், ஐகான்களும் காணாமல் போயின. முந்தைய விண்டோஸ் இயக்கங்களைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் சிஸ்டம் செயல்பட்டது. புதியதாக வந்த யு.எஸ்.பி. 3 வகை சாதனங்களுக்கான வழிகளைக் கொண்டிருந்தது.விண்டோஸ் 8.1: அக்டோபர் 2013ல், விண்டோஸ் 8.1 வெளியானது. முதன் முதலாக, மைக்ரோசாப்ட் தன் நிலைப்பாட்டில், வந்த வழியிலேயே செல்லும் திருப்பத்தை மேற்கொண்டது. குறிப்பாக, அதன் இடைமுகச் செயலியில் இந்தத் திருப்பத்தினை, நுகர்வோர்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கேற்ப மாற்றியது. ஸ்டார்ட் பட்டன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஸ்டார்ட் விண்டோவும் தரப்பட்டது.விண்டோஸ் 10: 30 செப்டம்பர் 2014ல் அறிவிக்கப்பட்டாலும், 2015 ஆம் ஆண்டு வரை, விண்டோஸ் 10 மக்களுக்குத் தரப்படவில்லை. 29 ஜூலை, 2015ல் தான் இது மக்களுக்குத் தரப்பட்டது. இதிலும், மைக்ரோசாப்ட், வந்த வழியில் செல்ல வளைவான ஓட்டத்தை மேற்கொண்டது. ஸ்டார்ட் மெனு மீண்டும் தரப்பட்டது. கம்ப்யூட்டர் பயனாளர்கள் ஏற்கனவே பழகி வந்த டெஸ்க்டாப் திரை வழங்கப்பட்டது. ஆனால், முதன் முதலாக, ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் (டெஸ்க்டாப், டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்) ஒரே சிஸ்டம் இயக்கம் இருக்கும் வகையில், விண்டோஸ் 10 வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டது. அனைத்திற்குமான புரோகிராம்களை, விண்டோஸ் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்திடும் வகையில் தரப்பட்டன. முதல் முதலாக, புதிய விண்டோஸ் பதிப்பு ஒன்று இலவசமாக வழங்கப்பட்டதுவும் இதுவே முதல் முறையாகும்
No comments:
Post a Comment