மது குடித்த விவகாரம்: பள்ளியில் இருந்து மாணவிகளை நீக்க கூடாது - ராமதாஸ் அறிக்கை - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2015

மது குடித்த விவகாரம்: பள்ளியில் இருந்து மாணவிகளை நீக்க கூடாது - ராமதாஸ் அறிக்கை

மது குடித்த விவகாரம்: பள்ளியில் இருந்து மாணவிகளை நீக்க கூடாது - ராமதாஸ் அறிக்கை
சென்னை, நவ. 25
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 11 ஆம் வகுப்பு மாணவிகள் 7 பேர் வகுப்பறையில் மது குடித்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், பள்ளிக்கூடத்திற்கு காலை 8.00 மணிக்கே வந்த இந்த மாணவிகள் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து குடித்துள்ளனர். இவர்களில் 2 மாணவிகள் தான் மது வாங்கி வந்து மற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். மது குடித்த மாணவிகளில் சிலர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியை 7 மாணவிகளையும் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளார். அவர்களில் 4 மாணவிகளின் பெற்றோரை அழைத்து மாற்றுச்சான்றிதழ்களையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இத்தகைய மது அருந்தும் நிகழ்வுகள் நடப்பது இது முதல் முறையல்ல.
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் அண்மையில் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். மாணவ சமுதாயத்தின் சீரழிவுக்கு இவை வெட்கப்பட வேண்டிய உதாரணங்களாகும்.
வகுப்பறையில் மது அருந்திய மாணவிகளை குற்றவாளிகளாக பார்க்கக்கூடாது; மாறாக மதுவால் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும். அவர்களை பள்ளியிலிருந்து நீக்கினால் அவர்கள் இதையே காரணமாக வைத்து இன்னும் அதிகமாக மதுவுக்கு அடிமையாகும் ஆபத்துள்ளது. பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு வேறு பணிகள் இருக்காது என்பதால் அவர்கள் மது உள்ளிட்ட தவறான வழிகளில் செல்ல அதிக நேரம் கிடைக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக, ஒரு மாணவரை பள்ளியிலிருந்து நீக்குவது தண்டனை அல்ல... எதிர்காலத்தை சீரழிக்கும் செயல். மது அருந்துவதால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை விட கல்வி மறுக்கப்படுவதால் அதிக பாதிப்பு ஏற்படும்.
எனவே, வகுப்பறையில் மது அருந்தியதாக இப்போதும், இதற்கு முன்பும் பள்ளியிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியரை கண்டித்து அறிவுரைகளும், மனநல ஆலோசனைகளும் வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில் மாணவ, மாணவியருக்கு சட்ட விரோதமாக மது கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? அதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக மாணவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சீரழித்து வரும் மதுவை ஒழிக்க தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages