- jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 4 January 2016

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல் தொடர்பாக என்எஸ்ஏ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் இன்று 3வது நாளாக பதன்கோட்டில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.பஞ்சாபில் உள்ள பதன் கோட் ராணுவ விமான படை தளத்தில் நேற்று முன்தினம் ஊடுருவிய தீவிரவாதிகள் அங்கு பயங்கர தாக்குதலை நடத்தினர். 7க்கும் அதிகமான தீவிரவாதிகள் நுழைந்து ராணுவ வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பயிற்சி எடுத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே உளவுத்துறை அளித்த எச்சரிக்கை காரணமாக அங்கு தயார் நிலையில் இருந்து ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார் உள்ளிட்ட 7 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தீவிரவாதியின் உடலில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை அகற்ற முயன்ற போது அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியானார். அவரது உடல் பெங்களூரிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
நிரஞ்சன் குமாருக்கு ராதிகா என்ற மனைவியும் 2 வயது மகளும் உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அம்பாலா நகரை சேர்ந்தபாதுகாப்பு கமாண்டோ, குருசேவக் சிங், 51 வயதான பாதுகாப்பு படை சுபேதாரான, பட்டே சிங் ஆகியோரும் உயிரிழந்தனர். இதில் பட்டே சிங் 1995ம் ஆண்டு, டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில், துப்பாக்கி சுடுதலில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 வருடங்கள் முன்புதான் பதன்கோட்டில் அவருக்கு பணியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாபில் உள்ள குருதாஸ் பூரைச் சேர்ந்த குல்வந்த் சிங், ஜெகதீஷ், சஞ்சீவ் குமார் ஆகியோரும் இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர். இதற்கிடையில் பதன்கோட் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் மேலும் 2 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே அங்கு 3வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை ராணுவ தரப்பில் உயிர் சேதத்தை தவிர்ப்பதற்காக மிகவும் கவனத்துடன் தேடுதல் ஆபரேஷன் நடத்தப்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பதன்கோட் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அவசர ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து சுஷ்மா அப்போது கருத்து கேட்டார். அப்போது மக்கள் கோபத்துடன் இருப்பதால் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம் என்று சிலரும், பேச்சு வார்த்தை இதுதான் சரியான தருணம் என்று சிலரும் கருத்துகளை கூறியதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர்கள் சத்யப்ரதா பால், சரத் சபர்வால், ராகவன் உள்ளிட்டோர் மட்டுமின்றி, முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஷியாம் சரண் ஆகியோரும்  பங்கேற்றனர். அதற்கு முன்னதாக இன்று காலை என்எஸ்ஏ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி உடனான இந்த ஆலோசனை கூட்டட்ததில் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தேசிய பாதுகாப்பு குறித்தும், பாகிஸ்தானுடனான உறவு குறித்தும், அப்போது ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையில் பதன்கோட் விமான படை தள தாக்குதலை தொடர்ந்து டெல்லி கான்பூர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முக்கிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராஜ்பாதையில் உள்ள ரெசினா ஹில்ஸ் ஆகிய முக்கிய இடங்களில் வாகன கட்டுப்பாடும், உயர் மட்ட பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் தீவிர சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பதான்கோட் பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதால் எந்த நேரமும் மீண்டும் தாக்க வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளதால் பஞ்சாபில் பதற்றம் நிலவி வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages