ஜெயலலிதா ஆட்சியமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன் : விஜயகாந்த் ஆவேசம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 30 December 2015

ஜெயலலிதா ஆட்சியமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன் : விஜயகாந்த் ஆவேசம்

சென்னை : அதிமுகவினரின் தரம் தாழ்ந்த அராஜகத்தை மக்கள் பார்க்கின்றனர் என்றும், ஜெயலலிதா ஸ்டிக்கர் முதல்வராக மாறிவிட்டார் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூரில் நிவாரணம் வழங்கவேண்டி தேமுதிக சார்பில் எனது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றபின் அதிமுகவை சார்ந்தவர்கள் மேடை, ஒலிப்பெருக்கிகள், பேனர்கள் மற்றும் கொடி, தோரணங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்து கொளுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பேனர்கள் கிழிக்கப்பட்டு, எனது உருவபொம்மை எரிக்கப்பட்டது. எல்லாம் நடக்கும்வரை அமைதியாக ஒருநாள் முழுவதும் இருந்துவிட்டு, அதன் பிறகு தேமுதிகவை சார்ந்தவர்கள்தான் தரம்தாழ்ந்து நடந்துகொண்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். தரமில்லாதவர்களுடன் 2011ல் கூட்டணி அமைத்து, தரம்தாழ்ந்த ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று, அவர்கள் ஆட்சி அமைத்திட பாடுபட்டதற்காக நான் வெட்கப்படுகிறேன்.


ஜெயலலிதா என்னுடன் கூட்டணி அமைக்கும்போது தரம் தாழ்ந்திருக்கிறோம் என்பது அப்போதே தெரியவில்லையா? அது இப்போதுதான் தெரிகிறதா? மீண்டும் சொல்கிறேன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தமைக்காக நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். ஜெயலலிதா தலைமையில் உள்ள அதிமுகவின் தரம் எப்படி இருக்கிறதென்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவரது அதிமுக மட்டுமே கண்ணியமிக்கது போலவும், மக்களுக்கு தொண்டாற்றுவது போலவும் கூறியுள்ளார். 1996ல் ஊழல் குற்றச்சாட்டால் முதல்வராக இருந்தபோதே பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனீர்களே அப்போதே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் அதிமுகவில் இல்லையென்பது நிரூபணம் ஆகிவிட்டது. தற்போது ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணியில் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டுவந்த நிவாரணப் பொருட்களை பறித்து, அதிமுகவினர் எப்படி ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் தொண்டாற்றினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.


அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது, முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதல்வராக மாறிவிட்டார். எனக்கு எதிராக எதையும் செய்யவேண்டாமென அறிவித்தும் கன்னியாகுமரியிலும், விழுப்புரத்திலும், அரியலூரிலும் உருவபொம்மையை எரித்து உள்ளார்கள். இதுதான் அதிமுக தொண்டர்களின் கட்டுப்பாடா? ஜெயலிதாவிற்கு அதிமுகவினர் கொடுக்கும் மரியாதையா? நான் தேமுதிக தொண்டர்களிடம் ஆளும் அதிமுக எனக்கு எதிராக வன்முறையையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்துவிட்டாலும், நீங்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி இருந்தேன். அதற்கு கட்டுப்பட்டு தேமுதிக தொண்டர்கள் எங்கேயும் எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடவில்லை. கட்டுப்பாடுமிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், சேதங்களையும் மறைத்திடவும், உரிய நிவாரணம் எங்கேயும் வழங்காமல் இருப்பதை மக்களிடம் மறைத்திடவும், ஸ்டிக்கர் அரசாங்கத்தால் நடத்தப்படும் நாடகம் இது.


மேலும் இந்த வன்முறை, அராஜகத்தைக் கண்டித்து குரல்கொடுத்த  திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் என அனைத்து அரசியல் கட்சியினருக்கும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் எனக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியவர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் என்னை ஆதரித்து கருத்துக்களை பதிவேற்றம் செய்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages