ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிகள் செயற்குழு கூட்டத்தில் முடிவு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 19 October 2015

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிகள் செயற்குழு கூட்டத்தில் முடிவு


மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அந்த 2 ஆண்டுக்கு மட்டும் இரு புதிய அணிகளை ஏலத்தின் மூலம் எடுக்க இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ராஜஸ்தான் அணி விவகாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் விளையாட நீதிபதி லோதா கமிட்டி அதிரடியாக தடை விதித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருந்தது விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. எனவே ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இவ்விரு அணிகளையும் ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கலாம், அதை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் நீதிபதி கமிட்டி கூறியிருந்தது.

இதனால் இவ்விரு அணிகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வந்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சை நீக்கினால், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் புகழ் மங்கிவிடும் என்று சென்னை ரசிகர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

செயற்குழு கூட்டம்
இந்த பரபரப்பான சூழலில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தலைவிதி குறித்து முடிவு செய்ய, கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் ஷசாங் மனோகர் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு மும்பையில் நேற்று கூடியது.

நீதிபதி லோதாவின் தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாகிகள், விளம்பரதாரர்கள், ஒளிபரப்புதாரர்கள் ஆகியோரிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கமிட்டி சமர்ப்பித்த அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ராஜீவ் சுக்லா கமிட்டி, ஐ.பி.எல். போட்டியில் புதிதாக 2 அணிகளை சேர்த்து 8 அணிகளுடன் போட்டியை தொடர்வது என்றும், சென்னை, ராஜஸ்தானின் 2 ஆண்டு கால தடை முடிந்ததும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் சிபாரிசு செய்து இருந்தது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு இவ்விரு அணிகளையும் முழுமையாக நீக்குவதில் உடன்பாடு இல்லை. இதையடுத்து சுக்லா கமிட்டியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இரு புதிய அணிகள்

இதன்படி 2016, 2017-ம் ஆண்டுகளில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகள் கலந்து கொள்ள முடியாது. இந்த 2 ஆண்டு காலத்திற்கு ஏலத்தின் மூலம் இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து 8 அணிகள் கொண்ட தொடராக நடத்தப்படும்.

பிறகு 2018-ம் ஆண்டு சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும் போது அந்த ஆண்டு முதல் புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகளையும் சேர்த்து மொத்தம் 10 அணிகள் கொண்ட போட்டித் தொடராக நடத்தப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் 2018-ம் ஆண்டு முதல் 10 அணிகள் கொண்ட தொடராக ஐ.பி.எல். நடத்தப்படுமா? என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.

இது தொடர்பான இறுதி முடிவுகள் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதி மும்பையில் நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் தான் அனைத்து முடிவுகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அப்போது தான் சென்னை, ராஜஸ்தான் அணி வீரர்கள் ஏலம் விடப்படுவார்களா? போன்ற விவரங்களும் வெளியாகும்.

சுக்லா பேட்டி

கூட்டத்திற்கு பிறகு ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் 4 விதமான பரிந்துரைகளை முன்வைத்தோம். அதில் ஒன்றை செயற்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகள் இல்லாததால் உருவாகும் வெற்றிடத்தை அடுத்த இரண்டு ஆண்டுகள் நிரப்புவதற்கு ஏலம் மூலம் இரு புதிய அணிகள் தேர்வு செய்யப்படும். 2 ஆண்டு தடை காலம் முடிந்த பின்னர் 10 அணிகளுடன் விளையாடுவதா? அல்லது 8 அணிகளுடன் விளையாடுவதா? என்பது முடிவு செய்யப்படும்’ என்றார்.

புதிய இரு அணிகள் சென்னை மற்றும் ஜெய்ப்பூரை அடிப்படையாக கொண்டு உருவாகுமா? என்று சுக்லாவிடம் கேட்ட போது, ‘எந்த நகரம் என்பதில் முன்னுரிமை இல்லை. யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும்’ என்றார். லோதா கமிட்டியின் இடைக்கால தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படும் என்று கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டைட்டில் ஸ்பான்சர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ‘டைட்டில்’ ஸ்பான்சராக குளிர்பான நிறுவனமான ‘பெப்சி’ இருந்தது. இந்த நிறுவனம் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ.396.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்த காலம் இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினைகளால் ஒப்பந்தத்தை தொடர விரும்பவில்லை என்று சில தினங்களுக்கு முன்பு பெப்சி அறிவித்தது. கிரிக்கெட் வாரியத்தின் சமாதான முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஐ.பி.எல். ‘டைட்டில்’ ஸ்பான்சராக செல்போன்கள் தயாரிப்பு கம்பெனியான ‘விவோ’ ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த 10 நாட்களுக்குள் விவோ, வங்கி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். இனி ‘விவோ’ ஐ.பி.எல். கிரிக்கெட் என்று அழைக்கப்படும். ஆனால் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்ற விவரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages