கடலூரில் உள்ள அரசு சித்தா மருத்துவப் பிரிவில் மருந்துகள் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடலூரில் செயல்பட்டு
வருகிறது. இந்த மருத்துவமனையின் ஒரு பிரிவாக சித்தா மற்றும் ஹோமியோபதி
பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி
வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. இப்பிரிவுகளுக்கு தினமும் சுமார் 200 பேர் வரை சிகிச்சைக்கு
வந்து செல்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால், சளி, காய்ச்சல் உள்ளிட்ட
பிரச்னைகளுக்கு சிகிச்சைக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.
தற்போது சித்தா பிரிவில் நிலவேம்புக் குடிநீர் காலை 6
மணி முதல் இரவு 8 மணி வரை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை குடிப்பதற்காகவும் தினமும் சுமார் 500 பேர் வரையில் வந்து செல்வதாக
கூறப்படுகிறது.
இந்நிலையில், இருமல், சளித் தொல்லைக்காக மருத்துவம்
பார்க்க வருபவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தும், அதற்கான பொடிகள்
வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. பருவமழைக் காலத்தில் அதிகமாக
தேவைப்படும் மருந்துகள் போதிய அளவு இருப்பில் இல்லாததால் கடந்த ஒரு வாரமாக
தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, கடந்த
ஒரு வாரமாக சளி, இருமல் தொந்தரவுகளுக்கான மருந்து வழங்கப்படவில்லை.
இதுகுறித்த தகவல் மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில்
மருந்துகள் வருமென எதிர்பார்க்கிறோம் என்றனர்.
மேலும், இந்தப் பிரிவுகளில், நோயாளிகள் அறை, அலுவலகம்,
ஹோமியோபதி மருந்து வழங்கும் இடம், சித்தா பிரிவு மருந்து வழங்கும் இடம்,
புறநோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் இடங்களில் மழைநீர் வடிவதால் நோயாளிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment