சென்னை,
ஆபாச பாடலை கண்டித்து சிம்பு வீட்டில் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
ஆபாச பாடல்
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அனிருத் இசையில் சிம்பு ஆபாச பாடல் பாடி
இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. தமிழகம் முழுவதும் சிம்பு-அனிருத்தை
கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தஞ்சை, சேலம் மற்றும் தேனியில்
இருவரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டன. போலீசிலும் புகார்கள் குவிகிறது.
இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது.
சென்னையில் சிம்பு வீட்டில் முற்றுகை போராட்டம் நடந்தது. தியாகராய நகர்
மாசிலாமணி தெருவில் சிம்பு வீடு இருக்கிறது. அந்த வீட்டின் முன்னால் நேற்று
காலை அகில இந்திய மாதர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கத்தினரும் திரண்டார்கள். சிம்புவை கண்டித்து அவர்கள் கோஷங்கள்
எழுப்பினார்கள்.
முற்றுகை
பெண்களை இழிவுபடுத்தி பாடல் பாடிய சிம்புவை போலீசார் கைது செய்ய வேண்டும்
என்றும் குரல் எழுப்பினார்கள். கைகளில் சிம்புவின் படங்களை கொண்டு வந்து
கிழித்து எறிந்தனர். அரைமணி நேரம் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சிலர் சிம்பு வீட்டுக்குள் ஆவேசமாக நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை
தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டங்கள் நடப்பதை தொடர்ந்து சிம்புவின் வீட்டு கேட் பூட்டப்பட்டு
உள்ளது. வெளியாட்கள் உள்ளே நுழைவதை தடுக்க பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு
உள்ளனர்.
சிம்பு தற்போது ஊரில் இல்லை. படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருப்பதாக
கூறப்படுகிறது. பாடலை திருடி ஆபாச வார்த்தைகளை இணைத்து விஷமிகள் வெளியிட்டு
விட்டதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து
இருக்கிறார்.
பாடலை யூடியூப்பில் வெளியிட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
No comments:
Post a Comment