வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு செய்த தவறுக்கு இறைவன் அளித்த தண்டனை - இளையராஜா பேச்சு
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சமீபத்தில் பெய்த கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் நேரடியாகவும், முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி மூலமாகவும் உதவிகள் அளித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தில் திரைப்பட துறையினரும் பெரும் அளவு பாதிக்கப்பட்டனர். படப்பிடிப்புகள், திரைப்பட காட்சிகள் முடங்கி பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. சில நட்சத்திரங்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) தொழிலாளர்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன.இதில் இளையராஜா பேசும்போது, 'இங்கு கொடுப்பவர்களின் கரங்களும், வாங்குபவர்களின் கரங்களும் ஒரே மாதிரியாக உள்ளது. இதை பார்க்கும்போது எனக்கு நானே கொடுத்துக்கொண்டதுபோல் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் ஒரு வகையில் தவறு செய்துள்ளோம். சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும். இந்த மழை நம்மை ஒரு வாரம் பாடாய் படுத்திவிட்டது. எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தபோதும் அவர்கள் பசியில் வாடியபோது உணவு கொடுக்க சென்றால் பக்கத்து வீட்டிலும் உணவில்லாமல் உள்ளனர் அவருக்கும் கொடுங்கள் என்று கூறும் அளவுக்கு நிலை மாறி உள்ளது. இது நம் கண் முன் பார்க்கும் நிகழ்வு. ஒவ்வொருவரும் கொடுத்து பழகுங்கள்' என்றார். தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம்சேம்பர், நடிகர் சங்கம், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் சார்பில் அரிசி, போர்வை, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, பெப்சி தலைவர் சிவா, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட திரைப்பட துறையினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment