தில்லியில் நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டட அரங்கில் வியாழக்கிழமை
நடைபெற்ற விழாவில், விருது பெற்ற தமிழறிஞர்கள் குன்றக்குடி பொன்னம்பல
அடிகளார் (திருக்குறள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்கான விருது), கவிஞர் வைரமுத்து (வாழ்நாள் சாதனையாளர்
விருது), எழுத்தாளர் ஜோ.டி. குரூஸ் (திருவள்ளுவர் கலை, அறிவியல் கண்ணோட்ட
விருது), "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் (பத்திரிகையாசிரியர் விருது),
விருதுகளை வழங்கிய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன், நாடாளுமன்ற
விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய மனித வள மேம்பாட்டுத்
துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,
எம்.பி.க்கள் தருண் விஜய், திருச்சி சிவா, கனிமொழி, டி.கே. ரங்கராஜன்,
டி.ராஜா, ராம்கோபால் யாதவ்.
இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குறளை மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் நடத்தி வரும் திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர் மன்றங்கள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் திறனாய்வுப் போட்டியில் தேர்வான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 133 பேருக்கு விருது வழங்கும் விழா, திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வரும் தமிழறிஞர்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை தில்லியில் நாடாளுமன்ற இணைப்புக் கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், "திருக்குறள்' மாணவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் அவர்கள் விருதுகளை வழங்கிக் கௌரவித்தனர்.
நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: திருவள்ளுவர் போன்ற முன்னோடிகள் வகுத்த நெறிகள் பற்றிய விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத்த வேண்டும். வாழ்வில் நமக்கு வழிகாட்டுதல் தேவை ஏற்படும் போது, பகவத் கீதை, குர்ஆன், பைபிள் ஆகியவற்றில் இருந்து சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். இவை எல்லாம் மதம் சார்ந்தவை. ஆனால், திருக்குறள் மதங்களைக் கடந்த வாழ்வியல் நெறிகளைக் கொண்டது. "ஹிந்து' என்பது அகண்ட கலாசார வாழ்வியலுக்கான வழி. அது கலாசாரத்தின் அடையாளம்தானே தவிர, குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு உரிய வார்த்தை அல்ல. திருக்குறளை தார்மிக வாழ்வியலுக்கான தவிர்க்க முடியாத நூல் என்று மகாத்மா காந்தியே கூறியுள்ளார். எனவே, அனைத்து இந்திய மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்த்து, அதை நாடு முழுவதும் அனைத்து நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய மற்ற தலைவர்கள் விவரம்:
பி.ஜே. குரியன்: 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள், 26 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் சிறப்பை உணர விரும்புவோர் கன்னியாகுமரி சென்று அங்குள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கண்டு அவரது பெருமைகளை அறியலாம். ஹரித்வாரில் திருவள்ளுவருக்குச் சிலை நிறுவ உத்தர பிரதேச மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இவை எல்லாம்தான் வேற்றுமையிலும் ஒற்றுமையை வலியுறுத்தும் காரணிகள். அரசியல்வாதிகள் தாற்காலிகமானவர்கள். திருக்குறளைப் போற்றும் தமிழறிஞர்கள்தான் உண்மையான தேசத்தின் தலைவர்கள்.
ராம்கோபால் யாதவ் (சமாஜவாதி கட்சி): அழகு தமிழ் மொழியை கற்கத் தவறியதற்காக அனைவரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். நெறிமுறை சார்ந்த வாழ்க்கையை நமக்குப் புகட்டியவர் திருவள்ளுவர். அவருக்குச் சிறப்புச் செய்ய நாடு விரும்பினால் அவர் வகுத்த நெறிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வெளிநாடு செல்லும் போது பகவத் கீதையை உலக நாடுகளின் தலைவர்களுக்குப் பரிசாக அளிக்கின்றனர். பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவில் ரவீந்திரநாத் தாகூர், திருவள்ளுவர் என பல கவிஞர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் படைப்புகளாகிய கீதாஞ்சலி, திருக்குறள் ஆகிய நூல்களையும் உலகத் தலைவர்களுக்குப் பரிசாக அளிக்க வேண்டும்.
டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தேச ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருக்குறளைப் போற்றி, ஆண்டுக்கு ஒருமுறை விழா எடுப்பதோடு நின்று விடக்கூடாது. திருவள்ளுவருக்கு நாடாளுமன்றத்தில் சிலை நிறுவ வேண்டும். இதேபோல, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் சிலையையும் நிறுவ வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம்தான் தேச ஒற்றுமை வலுப்பெறும்.
இந்நிகழ்வை திருவள்ளுவர் மாணவர்-இளைஞர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் சொ.ராமசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் டாக்டர் கிருஷ்ண கோபால், தத்தாத்ரேய ஹொசபலே, கவிஞர் வைரமுத்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா (திமுக), முகமது சலீம் (பிஎஸ்பி), உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் மோகன் பராசரன் உள்ளிட்டோர் பேசினர். மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி. ராமலிங்கம் (திமுக), கேசவராவ் (டிஆர்எஸ்), பாஜக தலைவர்கள் ஹெச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் மருத்துவர் எல்.பி. தங்கவேலு, "நல்லி' குப்புசாமி, மூத்த வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன், தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கே.வி.கே. பெருமாள், அ. ஜெயமூர்த்தி, அகில இந்திய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் இரா. முகுந்தன், இணைச் செயலர் பெ. இராகவன் நாயுடு, தில்லி தமிழ்க் கல்விக் கழக ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். "இந்நிகழ்வில் திருவள்ளுவர் கல்வியாளர் விருதுக்குத் தேர்வான வா.செ. குழந்தைசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் தில்லிக்கு வர இயலவில்லை. அவருக்கான விருது சென்னையில் விரைவில் நடத்தப்படும் நிகழ்வில் வழங்கப்படும்' என்று தருண் விஜய் தெரிவித்தார்.
"யுனெஸ்கோவில் திருக்குறள்'
யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் கலாசார அமைப்பு) நூலகத்தில் திருக்குறள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அரசியல் மாச்சரியங்களைக் கடந்து அனைவரையும் திருக்குறள் ஒருங்கிணைக்கிறது. 26 இந்திய மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மையம் (சிஎல்ஐ) மூலம் பிற இந்திய மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஐரினா போகோவாவை அண்மையில் சந்தித்த போது, இந்தியாவில் உள்ள பழங்காலக் காப்பியங்களை தங்கள் நூலகத்துக்கு அனுப்பி வைக்கும்படி கோரினார். அவரிடம் "இந்தியா சார்பில் எங்கள் நாட்டு பாரம்பரியம், மரபு, கலாசாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் திருக்குறளை அனுப்பி வைக்கிறோம்' என்றேன். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஸ்மிருதி இரானி.
No comments:
Post a Comment