சென்னை,
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் இந்திய மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்வி உதவி தொகையும், விருதினையும் வழங்கவுள்ளதாக அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம், கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில், பசுமை எரிசக்தியின் அவசியத்தைப்பற்றியும், தொடர்ந்த, நீடித்த வளர்ச்சியை உலக நாடுகள் தங்களது வளர்ச்சி திட்டங்களில் கொள்கையாக எப்படி உருவாக்க வேண்டும்? அமல்படுத்த வேண்டும்? என்பதைப் பற்றியும் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார்.
அப்போது அப்துல்கலாமுக்கு உதவியாக அவரது அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜூம் இருந்தார். இந்தநிலையில், அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரில் கல்வி உதவித்தொகை மற்றும் விருதுகளை, அமெரிக்காவிற்கு படிக்க வரும் இந்திய மாணவர்களுக்கு வழங்குவது என்று தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அப்துல்கலாமின் லட்சியங்கள்
இதுகுறித்து, தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ரோஜர் பிரைன்ட்லி, டாக்டர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ரோஜர் பிரைன்ட்லி கூறியிருப்பதாவது:-
இந்தியாவும், இந்த உலகமும் ஒரு மிகப்பெரிய மகானை இழந்து தவிக்கிறது. அந்த துன்பத்தில் அமெரிக்காவின் தெற்கு பல்கலைக்கழகமும் தங்களை இணைத்துக்கொள்கிறது. அவரை இழந்து வாடும் இந்திய மக்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உங்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அப்துல்கலாமின் லட்சியங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் உங்களது முயற்சியையும், அவரது குடும்பத்தாரது முயற்சியையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
உதவித்தொகை
டாக்டர் அப்துல்கலாமின் மிகச்சிறப்பான வாழ்வு, அவரது மதிநுட்பம், எளிமை, அறிவார்ந்த மற்றும் அமைதியான உலக சமூகத்தை உருவாக்குவதற்கு அவர் பாடுபட்ட விதம் ஆகியவற்றை எப்படி நினைவு கூறுவது? எப்படி போற்றுவது? அவரை எப்படி பெருமைப்படுத்துவது? என்று நினைத்தோம்.
அதனால் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம், டாக்டர் அப்துல்கலாம் பெயரில் கீழ்கண்ட செயல்களை செய்வது என்று தீர்மானித்திருக்கிறோம்.
டாக்டர் அப்துல்கலாம் பட்ட மேல்படிப்பு கல்வி உதவித்தொகை மூலம், இந்திய மாணவர்களுக்கு 4 வருட மேல் படிப்பிற்கு ரூ.56 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். அதோடு சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 லட்சம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
விருது
2016-17 கல்வியாண்டு முதல் சிறந்த மாணவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்படும். இந்த விருது அறிவியல் மற்றும் பொறியியலில் சாதனை படைக்கும் இந்திய மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்படும்.
டாக்டர் அப்துல்காலம் நினைவை போற்றும் வகையில் நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவையும், எங்களது அஞ்சலியையும் குடும்ப நண்பர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment