Main Menu

Top Menu

Pages

Pages

Friday, 11 December 2015

இந்தியாவில் தாக்குதல் நடத்தும் ஆற்றல்கொண்டது: பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை வெற்றி; விஞ்ஞானிகளுக்கு நவாஸ் ஷெரீப் பாராட்டு

இஸ்லாமாபாத்,

இந்தியாவில் தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்ட அணு ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தாக்க ஏற்றது

பாகிஸ்தான் ஷாஹீன் ரக ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்து வருகிறது. ஷாஹீன்-1, ஷாஹீன்-2 சோதனைகளை கடந்த ஆண்டு நடத்தியது.

இந்த நிலையில் நேற்று அதிரடியாக ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. இது தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும். இந்த ஏவுகணை அணுகுண்டு மற்றும் மரபுரீதியிலான வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு, 2,750 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது. அதாவது, இந்தியாவில் தாக்குதல் நடத்தும் ஆற்றலை கொண்டுள்ளது.

வெற்றி

இந்த ஏவுகணை சோதனை, பல்வேறு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்ப வரையறைகளை உறுதிப்படுத்துவதையே இலக்காக கொண்டிருந்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை மக்கள் தொடர்பு அமைப்பு ‘ஐ.எஸ்.பி.ஆர்.’ கூறுகிறது.

இந்த ஏவுகணை சோதனை, அனைத்து அம்சங்களிலும் வெற்றி கண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சோதனையை, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் பிரிவு உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் நேரில் பார்த்தனர்.

பாராட்டு

பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் ஒரு மைல் கல்லாக விளங்குகிற ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையின் வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகள், என்ஜினீயர்களை பாதுகாப்பு திட்டங்கள் பிரிவு தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் மஜார் ஜமீல் பாராட்டினார்.

இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “பிராந்தியத்தில் அமைதியாக ஒருங்கிணைந்து வாழ்வதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அந்த வகையில் தெற்கு ஆசியாவில் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை பலப்படுத்த இது உதவும்” என கூறினார்.

மேலும், “இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெறுவதற்கு முழு மனதுடன் பணியாற்றிய தொழில் நுட்ப வல்லுனர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், “எந்தவொரு தாக்குதல்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ள பாதுகாப்பு படைகளின் ஆயத்த நிலை, பாதுகாப்பு படைகளின் தளகர்த்தர்கள், கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்” எனவும் கூறினார்.

நவாஸ் ஷெரீப்

இதேபோன்று ஷாஹீன்-3 ஏவுகணை சோதனை உரிய வெற்றி கண்டிருப்பதற்கு, இந்த திட்டத்தில் தொடர்புடைய விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ராணுவ ஆயுத திட்டப்பிரிவினர் என அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி மம்னூன் உசேன் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதியும் ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

இதுபற்றி அப்போது கருத்து தெரிவித்த இஸ்லாமாபாத் காயித் இ அஸாம் பல்கலைக்கழகத்தின் ராணுவ கல்வி பிரிவு விரிவுரையாளர் சாதியா தஸ்லீம், “ஷாஹீன்-3 ஏவுகணை ஏறத்தாழ 1,700 மைல் தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்த வல்லதாகும். அதாவது இந்தியாவின் வெகு தொலைவில் உள்ள இடங்களையும் தாக்க ஏற்றதாகும். பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் இது இந்தியாவினால் ஏற்படும் பாதிப்பை தடுத்து ஒடுக்க ஏற்றதாக அமையும்” என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment